வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

காதல்.. காதல்.. காதல்...





பதினோராண்டுகள் கடந்து பனிரெண்டாம் ஆண்டை நோக்கி என் காதல் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆம். என் காதல்தான். என்னவளுக்கான காதல். பதின்மத்தின் தொடக்கத்தில், இடைநிலை பள்ளியின் இறுதி ஆண்டில் உணர்வுகளை ஒவ்வொன்றாய் பகுத்துப் பார்க்க பழகிக்கொண்டிருந்த நாட்களில், காதல் என்ற ஒரு பதத்தை, ஒரு உணர்வை ஆம் அன்று அதுவும் ஒரு உணர்வு மட்டும் தான், அந்த பிரபஞ்ச உணர்வைப் பற்றிய கற்பிதங்கள் அதிகம் இல்லாத சமயத்தில் எங்கோ எப்படியோ அந்த சிறு பிரபஞ்ச விதை ஒன்று என்னில் விழ, அது மெல்ல மெல்ல தளைத்தோங்கி வளர்ந்து இதோ இன்று பனிரென்டாண்டு கால இடைவெளியில் அது மாபெரும் விருட்சமாய் வளர்ந்து, தன்னை சுற்றி ஒரு மாபெரும் காட்டையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
சற்றே பின்னோக்கிப் பார்த்தால் எத்தனை எத்தனை அனுபவங்களை அது எனக்கு கொடுத்திருக்கிறது. காதல் என்றால் அதன் அர்த்தம் கூட முழுவதுமாய் தெரியாத காலத்தில் விழுந்த விதையாதலால், அது மனதை முட்டி முட்டி வளரும் சமயத்தில் அது தரும் பூரிப்புகளை புரிந்து கொள்ள முடியாமல், அது தரும் வேதனையை எப்படி அனுபவிப்பது என்று அறியாமலும் நான் திக்கு முக்காடிய நாட்களை எண்ணிப்பார்க்கையில் எத்தனை சுகம் அதில். சிறு சிறு கிறுக்கல்களாய் வெளிப்பட்டது உனக்கான காதல். வேறென்ன செய்ய முடியும். உனக்கான காதலை வெளிப்படுத்த எனக்கு கிடைத்த ஊடகம் கவிதைகள் மட்டும்தான். ஆம் கனவுகள் உன்னோடு நான் வாழும் பகுதி. கவிதைகள் நமக்கான காதலின் சுவடுகள். இவை இரண்டும்தான் உனக்கான உனக்கு மட்டுமே ஆன எனது காதலை உயிர்ப்போடு வைத்திருக்கும் காரணிகள். காலங்கள் கடந்தாலும் அக்கவிதைகள் நாம் காதல் கதைகளை ஓயாமல் இக்காலப் பெருவெளி எங்கும் ஓயாமல் உரைத்துக்கொண்டே இருக்கும்.
எத்தனை காதல், எத்தனை அன்பு, எத்தனை மகிழ்ச்சி, எத்தனை துன்பம், எத்தனை சிரிப்பு, எத்தனை அழுகை இன்னும் எத்தனை எத்தனையோ உணர்வுகள் அனுதினம் பெறுகிறேன் உன் காதலின் கருணையினால். அத்தனையும் உன் காதலால், எங்கெங்கு நோக்கினும், என்னென்ன செய்யினும் எல்லாவற்றிலும் உனக்கான காதல் மட்டுமே எஞ்சி நிற்கிறது. எல்லாம் எல்லாம் உனக்கனவைகள் மட்டுமே. எப்படிக் கூறுவேன் இதற்க்கு மேல். வார்த்தைகள் இல்லை என்னிடம்.
சிறு விதையாய் விழுந்த காதல், பெரும் கானகமாய் மாறிக்கிடக்கிறது இங்கு. அங்கு விடும் சிறு துளிர் முதல் காய்ந்து விழும் சருகு வரை ஒவ்வொன்றும் உனக்கே உனக்கானவை. அவை உனக்கவே காத்துக்கிடக்கின்றது. ஆம் உனக்காக காத்திருப்பது நானும் என் காதலும் மட்டுமல்ல, உனக்கான காதலால் விளைந்து உனக்காகவே காத்துக் கொண்டிருக்கும் என் காதலின் படைப்புகள் ஒவ்வோன்றும்தான். உனக்கான உலகொன்றையே உருவாக்கி வைத்திருக்கிறது உனக்கான என் காதல். எங்கிருக்கிறாய் என் சுவாசமே. அனுதினம் உன்னையே சுவாசிக்கும் எனக்கு முகம் காட்ட இன்னும் எத்தனை காலம் வேண்டுமுனக்கு. இத்தனை காதலையும் ஒட்டுமொத்தமாய் அள்ளிப் பருக எப்பொழுது வரப்போகிறாய் நீ. இப்படியெல்லாம் நான் ஒருபோதும் உன்னைக் கேட்கப்போவதில்லை.
காரணம் இந்த பிரபஞ்சப் பெருவெளி மொத்தமாய் உனது பிம்பமாய் காணும் எனக்கு ஒரு போதும் நீ இல்லை என்ற எண்ணம் வருவதே இல்லை. உன்னை ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சுவாசத்திலும் அழுத்தமாய் உணர்கிறேன் என்னில். ஆம் என்னில் ஐக்கியமாகிப்போன ஆன்மத் தேடல் நீ.
நீ ஒருவேளை வரலாம் ஏன் வராமலே கூடப் போகலாம். அதனால் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்னில். எனது காதல் கானகம் உனக்காகப் பூக்கும் பூக்களை பூத்துக் கொண்டே இருக்கும். அதில் பாடும் பறவைகள் அனைத்தும் மொழியற்ற உன் பெயரை அவற்றின் மொழியில் பாடிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு விடியலும் உனக்கவே விடியும். ஒவ்வொரு அந்தியும் உனது வெட்கத்தை நினைவூட்டும். இரவுகள் ஒவ்வொன்றும் உன் உறக்கத்திற்கான ஏற்பாடாய் வெண்மேக பஞ்சணையில் வெண்ணிலா தலையணையில் பூந்தென்றல் தாலாட்ட என் கவிதைகாளால் உறங்க வைப்பேன் உன்னை. கடலலைகள் காதல் நுரைபொங்க நின் பாதம் முத்தமிட வந்து செல்லும். இங்கு எல்லாம் எல்லாம் உனக்கவே நடந்து கொண்டிருக்கும். பிரபஞ்சம் இருக்கும் வரை நானும் உனக்கான என் காதலும் உனக்கவே வாழ்ந்து கொண்டுதான் இருப்போம்.

எத்தனையோ கவிதைகள் எழுதுகிறேன்
ஒவ்வொரு கவிதையை வாசித்து முடித்ததும்
அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி
யாரந்தப் பெண் என்று. .
என் சுவாசத்தில் கலந்தவளை
எப்படிக் காட்டுவேன் அவர்களிடம்.
ஒரு நல்ல காதல் கவிதையை
நான் படித்து முடிக்கும் சமயத்தில்
என்னில் ஏற்ப்படும் சில்லிப்பில்
கலந்து கிடக்கிறது அவளின் அணைப்பு.
அவளுக்கான கவிதையை எழுதி முடித்து
முற்றுப்புள்ளி வைக்கையில் எழும் உணர்வில்
அழுந்திக் கிடக்கிறது அவள் எனக்களிக்கும் முத்தச்சத்தம்.
என் மீது விழும் முதல் மழைத்துளியின்
தீண்டலில் இருக்கிறது அவளின் இதழ்களின் ஈரம்.
தனிமையில் நடக்கையில் என் கரம் நுழைந்து
கொஞ்சி விளையாடிச் செல்லும் தென்றலில் இருக்கிறது
அவள் கரம் பிடித்து நடக்கும் மென்மை.
காற்றடிக்கும் போதெல்லாம் வந்து வந்து
என் சன்னல் எட்டிப் பார்த்து செல்லும்
கொடியின் அசைவுகளில் மிளிர்கிறது
அவளின் கள்ளப் பார்வை.
இப்படி என் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும்
நிறைந்து கிடக்கும் அவளை எப்படி பகுத்துக்
காண்பிப்பது உங்களிடம்.
என்னவளே, என்னுள் மொத்தமாய் நிறைந்து
சத்தமில்லாமல் வாழ்ந்துவரும் உன்னை
எப்படி காண்பிப்பேன் இவர்களிடம்.
என் சுவாசமாகிப் போன என் காதலே,
இன்னும் இன்னும் என்னை நிறைத்துவிடு,
நானெது காதலெது என்று நானறியாவண்ணம்
என்னை காதலில் அழுத்தி எடு.
இன்னும் இன்னும் அதிகம் அவளுக்காய்
நான் வாழ வேண்டும்.
இன்னும் இன்னும் அதிகம் அதிகம்
காதலாகிப் போக வேண்டும்.
வா வந்தெனை இறுக அணைத்துக்கொள் காதலே.
என் உலகம் அந்த அணைப்பில் உயிர் பெறட்டும்..
காதல் மட்டுமே அங்கு நிறைந்திருக்கட்டும்.
எல்லாம் காதலாகிப் போகட்டும்.
               
காதல், வெறும் வார்த்தையல்ல அது ஒரு பிரபஞ்சப் பேரியக்கம். ஒரு ஈர்ப்பு, ஒரு விசை, ஒரு சக்தி, இங்கு எல்லா இயக்கங்களும் ஒரு காதலுடன்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சமே காதலின் சக்தி. ஈர்ப்பில்லாமல் போனால் எந்த நட்சத்திரமும், எந்த ஒரு சூரியனும் தன்னிலை நின்று இயங்க வாய்ப்பில்லை. பிரபஞ்சம் சின்னாபின்னமாகிவிடும், எல்லாம் காதல் தான். அதன் வெளிப்பாடுகள் வேறு வேறானவை. அதன் அதிர்வுகள் முற்றிலும் வேறுபட்டவை. காதலுக்கு காரண காரணிகள் தேவையற்றவை. எந்த தேவையின் அடிப்படையில் நிலவு பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. எந்த தேவையின் அடிப்படையில் இந்த பூமிப் பந்து நம்மை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் ஒரு எதிர்பார்ப்பற்ற காதலின் வெளிப்பாடே. ஆதலால் காதல் செய்வீர். தேவைகளைக் கடந்தொரு காதல் செய்வீர். உருவமற்றதாயினும் சரி, உலகிலற்றதாயினும் சரி காதல் செய்வீர்.
வெறும் காதல். அது போதும் எப்போதும். எல்லாம் கடந்தொரு காதல் எப்போதும் எல்லோரிடத்தும் எந்நேரமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதை உணர இங்கு பலர் முயற்சிப்பது கூட கிடையாது. சற்றே உங்கள் இதயத்தின் மேல் மென்மையாய் கரத்தினை வைத்து அந்த இயத்தின் ஜதியில் கருத்தினை வைத்து உங்கள் நேசத்திற்குரிய ஒருவரை நினைத்துப் பாருங்கள். லப் டப். லப் டப்.. லப் டப். மெதுவாய். மிக மெதுவாய் நீங்கள் காதலில் கரையத் தொடங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அது அப்படியே போகட்டும். இன்னும் ஆழமாய் போகட்டும். காதல் மட்டுமே எங்கும் நிறைதிருக்கட்டும். . . 

 கௌதமன் ராஜகோபால். . .

1 கருத்து:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவையும் தொடுத்திருக்கிறேன். காண வாரீர்......

http://blogintamil.blogspot.in/2014/11/dh.html

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.